நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கோவில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.
வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான பூவோடு எடுக்கும் உற்சவம் நேற்று காலை தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி அக்னி பூச்சட்டியை கையில் ஏந்தியவாறு பிரகாரத்தை வலம் வந்தார். அப்போது திரண்டிருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தாங்கள் கொண்டு வந்த காணிக்கை நாணயங்களை பூச்சட்டியில் போட்டனர்.
அடுத்து, நீண்ட சாட்டையை கையில் வைத்திருந்த பூசாரி, வரிசையில் நின்ற பக்தர்களின் கைகளிலும் உடலிலும் சாட்டையால் அடித்தார். இவ்வாறு சாட்டையடி வாங்குவதால் பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் விலகும் என்றும், நீண்டநாள் நோய்கள், தீராத பிணிகள் நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, பெண்களும் ஆண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாட்டையடி வாங்கினர். பின்னர் அம்மனை தரிசித்து தங்கள் வழிபாட்டை நிறைவு செய்தனர்.




