ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 87 விடுதிகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய வன விலங்குகள் வாரியம் மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இன்றி செயல்படும் விடுதிகளால் மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் ஆர். கற்பகம் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே. முத்துகுமார் அடங்கிய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஈரோடு கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அப்பகுதியில் 87 விடுதிகள் உள்ளதாகவும், அவற்றில் எதுவும் உரிய அனுமதி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்புகளை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதற்கான ஆதாரமும் இல்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமாக இயங்கும் 87 விடுதிகளையும் உடனடியாக மூடவும், அதன்பின் அந்தக் கட்டுமானங்களை இடிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி. சொக்கலிங்கம், ஏற்கனவே மூடப்பட்ட சில விடுதிகள் பின்வாசல் வழியாகத் தொடர்ந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உரிய உரிமம் இல்லாமல் செயல்படும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.




