இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.38,000 கோடி) நிதி உதவி, இந்த ஆண்டு இறுதியுடன் நிறுத்தப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா நீண்ட காலமாக இஸ்ரேலுக்கு ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக பல பில்லியன் டாலர்களை உதவியாக வழங்கி வருகிறது. இந்த உதவி இனி தொடராது என்று டிரம்ப் உறுதியாகத் தெரிவித்தார்.
“இஸ்ரேலுக்கு பொருட்களாகவும் பணமாகவும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வரை வழங்கி வருகிறோம். அவர்கள் இப்போது பொருளாதார ரீதியாக வலுவான நாடாக வளர்ந்துவிட்டதால் இந்த நிதி தேவையில்லை. இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு இஸ்ரேலுக்கு நிதி வழங்கப்படாது” என அவர் கூறினார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவாகப் பேசியதாகவும், பல ஆண்டுகளாகவே இந்த விஷயம் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தனது முடிவை நெதன்யாகு நன்கு புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
வரி செலுத்துவோரின் பணம் இஸ்ரேலுக்குச் செல்வது அநீதி என அமெரிக்காவின் இடதுசாரிகளும் ஜனநாயகக் கட்சியினரும் விமர்சித்து வந்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், அவர்களுக்கு இனி பேச வாய்ப்பில்லாமல் செய்யவே இந்த முடிவு என்றார். இருப்பினும், இஸ்ரேல் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து பணம் கொடுத்து வாங்கலாம் என்றும், அவற்றைத் தயாரித்து விற்க அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.




