அக்டோபர் 29 அன்று சுமார் 6.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்படுவதற்கு முன், தாக்குதல்காரர்கள் பல மாதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாக பைனான்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு பொறியாளரை மாற்றியமைக்கப்பட்ட மென்பொருள் நிறுவி மூலமும், மற்றொருவரை போலி வேலை நேர்காணல் மூலமும் அவர்கள் வளைத்துப் போட்டனர். நவம்பர் 3 தேதியிட்ட பாதுகாப்பு அறிக்கையில் இந்தச் சம்பவங்களின் வரிசையை நிறுவனம் விவரித்துள்ளது.
இந்தத் திருட்டுக்கு வடகொரியாவே காரணம் என்று அமெரிக்காவின் FBI கூறியுள்ளது; வடகொரியா அதை மறுத்துள்ளது. இது ஒரே ஒரு தனிப்பட்ட ஊடுருவல் அல்ல, பல மாதங்களில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட தாக்குதல் என்று பைனான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் தொடங்கிய விதம்
ஜூன் மாதம், பைனான்ஸின் Wallet DevOps குழுவில் பணியாற்றும் ஒரு பொறியாளர், பிரபலமான AI கோடிங் கருவியை இணையத்தில் தேடியபோது, மாற்றியமைக்கப்பட்ட Homebrew நிறுவியைப் பதிவிறக்கம் செய்தார். Homebrew என்பது macOS கணினிகளில் மென்பொருட்களை நிறுவவும் நிர்வகிக்கவும் டெவலப்பர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி. அப்போதே அசாதாரணச் செயல்பாடு கண்டறியப்பட்டு, அந்தப் பொறியாளரின் சாதனம் மாற்றப்பட்டதாக பைனான்ஸ் கூறுகிறது. ஆனால் அதற்குள், அவரது பணிப்பொறுப்பையும், வாலட் கட்டமைப்பில் வேலை செய்யும் சக ஊழியர்கள் யார் என்பதையும் தாக்குதல்காரர்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.
செப்டம்பரில், வேறொரு மென்பொருள் பொறியாளரை, முறையான வேலைவாய்ப்புத் தளம் ஒன்றில் திட்ட இயக்குநர் போல நடித்த ஒருவர் தொடர்புகொண்டார். அவர் இரண்டு நேர்காணல்களில் கலந்துகொண்டார். முதலாவது, மனிதவளப் பிரதிநிதி எனக் கூறிக்கொண்டவருடன் நடந்த நேரடி வீடியோ அழைப்பு; நம்பிக்கையைப் பெற அவர் ஒரு தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்கைக் காட்டினார். இரண்டாவது, இல்லாத ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி போல நடித்தவருடன், அரட்டைச் செயலி வழியாக நடைபெற்றது.
பிறகு தரப்பட்ட கோடிங் பணியை அவர் தனது அலுவலகக் கணினியில் பதிவிறக்கினார். அதிலிருந்த தீம்பொருள் நிறுவலின்போது இயங்கியது. டெவலப்பர் கருவி ஒன்றின் முறையான பகுதியை அது கைவைத்து மாற்றியதால், கணினியில் கட்டளைகளை இயக்கும் வசதி தாக்குதல்காரர்களுக்குக் கிடைத்தது; கண்டறியப்படாமல் தப்பிக்கும் வகையிலும் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. பைனான்ஸின் எண்ட்பாயிண்ட் பாதுகாப்புக் கருவிகள் அதைக் கண்டறியவில்லை.
திருட்டு நடந்த விதம்
அக்டோபர் 20 அன்று, பாதிக்கப்பட்ட கணினியையும் உள்ளக AI கருவியையும் பயன்படுத்தி, Wallet DevOps பொறியாளர் மற்றும் மற்றொரு சக பொறியாளரின் சாதனங்களை தாக்குதல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். முதல் பொறியாளரின் கணினியில், கண்டெய்னர்களை (தொகுக்கப்பட்ட மென்பொருள் அலகுகள்) இயக்க அனுமதி அளிக்கும் டோக்கன் ஒன்றையும் கண்டுபிடித்தனர்.
அக்டோபர் 29 அன்று, திருடிய அணுகல் விவரங்களைக் கொண்டு மூன்றாவது பொறியாளரின் கணினியில் நுழைந்து, ஒரு கண்டெய்னரை இயக்கி, தீங்கிழைக்கும் ஸ்கிரிப்டை ஓட்டினர். இதனால் பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் உள்ளக வாலட் கையொப்ப சேவையை அணுக முடிந்தது. இணையத்துடன் இணைந்த ஐந்து ஹாட் வாலட்களிலிருந்து, வழக்கமான பணம் எடுக்கும் நடைமுறைக்கு வெளியே நிதியை அவர்கள் வெளியேற்றினர்.
மீட்பு நடவடிக்கைகள்
சுமார் 2.85 பில்லியன் டாலரை முடக்கியதாகவோ இடைமறித்ததாகவோ பைனான்ஸ் கூறுகிறது. பணம் எடுப்பதை நிறுத்திய பிறகும் நிதி நகர்ந்தது; அந்தப் பரிவர்த்தனைகள் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டிருந்ததே காரணம். இழப்பை நிறுவனமே ஏற்கும் என்றும், அதற்குத் தேவையான தொகையை ஒதுக்கிவைத்துள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட டோக்கன்களில் 98 சதவீதத்தை ஈடுசெய்துவிட்டதாகவும், விரைவில் விற்க இயலாத மீதமுள்ளவற்றைத் திரட்டும் பணி நடப்பதாகவும் கூறியுள்ளது.
திருட்டுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சாதனங்களை மாற்றியதாகவும், வெளிப்பட்ட அணுகல் விவரங்களையும் டோக்கன்களையும் செயலிழக்கச் செய்ததாகவும், ஊழியர்களின் சாதனங்களை மேலும் கடுமையாகச் சோதித்ததாகவும், வாலட் அமைப்பையும் உள்ளக AI கருவிகளையும் புதிதாக உருவாக்கியதாகவும் பைனான்ஸ் கூறுகிறது. அசாதாரணச் செயல்பாடுகளை AI மூலம் கண்டறியும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.




