நாடு முழுவதும் கூடுதலாக 92,000 மெகாவாட் மின் சேமிப்பு திறனை உருவாக்க ரூ.14,500 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இத்திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.97,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் சேமிப்பு திறனுடன் ஒப்பிடுகையில், புதிதாக உருவாக்கப்படும் திறன் 170 சதவீதம் அதிகமாகும்.

சோலார் மற்றும் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்துவதால் மின் வினியோகத்தின் நிலைத்தன்மை மேம்படும். மேலும், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கவும், வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இத்திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், லித்தியம், நிக்கல் போன்ற முக்கிய கனிமங்களை தாதுக்களில் இருந்து உள்நாட்டிலேயே பிரித்தெடுத்து சுத்திகரிக்க, அதே ஐந்து ஆண்டு காலத்துக்கு ரூ.2,814 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் கீழ் இரண்டு லித்தியம் ஆலைகள், இரண்டு நிக்கல் ஆலைகள் என மொத்தம் நான்கு தொழிற்சாலைகள் நாட்டில் அமைக்கப்படும்.

இதன்மூலம் முக்கிய கனிமங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியில் இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைந்து, உள்நாட்டுத் தொழில்துறை வலுப்பெறும் என அரசு தெரிவித்துள்ளது.