தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பகங்களில் வசூலித்த லஞ்சப் பணத்துடன் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கினார். புலியகுளம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமியிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆறு இனிப்பகங்களில் ராமசாமி லஞ்சம் வசூலித்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, பிரபுதாஸ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அதில் அவர் லஞ்சம் பெற்றது உறுதியானது. பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
பண்டிகைக் காலத்தில் இனிப்பகங்கள், பேக்கரிகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன; கேட்டரிங் நிறுவனங்களும் ஆர்டர் எடுக்கின்றன. கலப்படம், தரமற்ற இனிப்புகளைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், ஆய்வுக்குச் செல்லும் சில அதிகாரிகள் இந்தப் பருவத்தைப் பயன்படுத்தி வசூலில் ஈடுபடுவதுடன், கிலோ கணக்கில் இனிப்புகளையும் காரங்களையும் இலவசமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.
இலவசமாக இனிப்பு பெறும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனா சில நாட்களுக்கு முன் உத்தரவில் எச்சரித்திருந்தார். இந்நிலையிலும் இந்த அலுவலர் லஞ்சம் பெற்று சிக்கியுள்ளார்.
ஆறு கடைகளில் வசூலித்த பணத்துடன் அவர் பிடிபட்டதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர். மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா, லஞ்சம் பெற்றது குறித்து விசாரித்து அறிக்கை தயாரித்து கமிஷனருக்கு அனுப்பப்படும் என்றும், அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.




