ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய வர்த்தகக் கப்பல்கள் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்க ஈரான் ‘பச்சைக் கொடி’ காட்டியுள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் சூழல் காணப்படும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வரும் நாடுகள், மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்கப்போவதாக ஈரான் முன்னதாகவே அறிவித்திருந்தது.
இதன் முக்கிய அம்சமாக, இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்தக் கடல்வழியைப் பயன்படுத்த ஈரான் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணை இயக்குநர் அமீர் ஹயாத் மொகாதம் கூறுகையில், இந்த 4 நாடுகளின் கப்பல்களும் போர் அச்சுறுத்தல் இன்றிப் பயணிக்கலாம் என்றார். மேலும், ஈரான், இந்தியா மற்றும் சீனா நாடுகளின் கப்பல்களுக்குப் போக்குவரத்துக் கட்டணம் உண்டு என்றும், கத்தாருக்குக் கட்டணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.




