தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீதான லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு கேரள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு மாநில உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆர்.) முன்வைத்து, ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
ஒப்பந்ததாரர் சஜன் என்பவர் ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவில் சமீபத்தில் இந்தப் புகாரை அளித்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், கேரளாவின் பொதுப்பணித் துறைச் செயலாளராக ஞானேஷ்குமார் இருந்தபோது, கேரள மாநில போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் நடந்த சாலைப் பணிகளுக்கான தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின்படி, 2006ல் மலேஷிய நிறுவனமான ‘பட்டிபெல்’ மேற்கொண்ட சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தன. 17 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு பொறியாளர்கள் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், காசோலையை விடுவிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிறுவனம் அதற்கு மறுத்ததால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நெருக்கடியால், மலேஷியாவைச் சேர்ந்த திட்டப் பொறியாளர் லீ சீ பின் 2006ல் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் எழுதிய கடிதத்தில் லஞ்சம் கேட்கப்பட்டது குறித்துக் குறிப்பிட்டிருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. 2006ல் நடத்தப்பட்ட விசாரணை போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டதாகவும், தற்போது தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.




