தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க திமுக நிர்வாகி அரசகுமார் உள்ளிட்டோர் தனி அலுவலகம் நடத்தியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத்தருதல் உள்ளிட்ட செயல்களுக்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்ததாக, பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ் (48) கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இதற்கு முன், திமுக செய்தி தொடர்புக் குழு துணை செயலராக இருந்த அரசகுமார் (58) கைதாகி, தற்போது ஜாமினில் உள்ளார். இவர்களின் முக்கிய கூட்டாளியான முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் நீதிமன்றத்தில் சரணடைந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டுச் சதி செய்து இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசின் அறிவிப்புகளை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். 2023-க்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிகளின் அங்கீகார நீட்டிப்பு 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டது; மூன்று முறை முறையாக அங்கீகாரம் பெற்று விதிகளைப் பின்பற்றும் பள்ளிகள் விரும்பினால் 20 ஆண்டுகளுக்கான சான்றிதழ் பெறலாம். மேலும், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறை சான்று, குடிநீர், கழிப்பிட வசதி, ஆசிரியர்களின் தகுதி ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரச்னைகள் உள்ள 177 பள்ளிகளின் நிர்வாகிகளை இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, “மகேஷ் நாங்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்திடுவார்; எங்களுக்குப் பணம் கொடுக்காமல் பள்ளியை நடத்த முடியாது” என மிரட்டியதாக போலீசார் கூறினர். பணம் வசூலிக்க தனி அலுவலகம் நடத்தப்பட்டது மகேஷுக்கும் தெரியும் என்றும், அரசகுமாருடன் இணைந்து தனியார் பள்ளி நிர்வாகிகளான சந்திரசேகரன், தினேஷ், சுசீந்திரன், தெய்வசிகாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வசூலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.




