பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரும் திரைப்பட நடிகருமான ரஸ்ஸல் பிராண்ட் (51), ஒரு பாலியல் வன்கொடுமை மற்றும் மூன்று பாலியல் தாக்குதல் வழக்குகளில் குற்றவாளி என லண்டன் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தின் நடுவர் குழு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்குகள் நான்கு பெண்களுடன் தொடர்புடையவை.
மேலும் இரண்டு வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் அத்துமீறல் முயற்சி வழக்கு ஆகியவற்றில் அவர் குற்றமற்றவர் என நடுவர் குழு கூறியது. திங்கட்கிழமை தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஜோயல் பென்னதன் தெரிவித்தார். கணிசமான காலச் சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரித்தார். பிரிட்டனில் வன்கொடுமைக் குற்றத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை விதிக்கலாம்.
ஜாமீன் மறுப்பு
தீர்ப்புக்குப் பிறகு, வார இறுதி நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்குமாறு பிராண்டின் வழக்கறிஞர் இயன் வின்டர் மனிதாபிமான அடிப்படையில் கேட்டுக்கொண்டார். தனது விவகாரங்களைச் சீர்செய்யவும், மூன்று சிறு குழந்தைகளைச் சந்தித்துவிட்டுச் செல்லவும் அந்த அவகாசம் தேவை என்றார்.
குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்த நீதிபதி, பிராண்டுக்கு வெளியேறிவிடக்கூடிய அளவுக்குப் பொருளாதார வசதி இருப்பதாகக் கூறினார். தண்டனை அறிவிப்பின்போது அவர் ஆஜராகாமல் போகக்கூடும் என்ற அச்சத்துக்கு வலுவான காரணங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டு, பிராண்ட் காவலில் வைக்கப்பட்டார்.
கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, தாம் நலமுடன் இருப்பதாகத் தம் வழக்கறிஞர் குழுவுக்கு பிராண்ட் சைகை காட்டினார். தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அவரது மனைவி லாரா பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.
விசாரணையும் எதிர்வினைகளும்
வானொலி நிலையம், பிராண்டின் வீடு உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் 2000-களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்தத் தண்டனைகள் அமைந்தன. எல்லாக் குற்றச்சாட்டுகளையும் பிராண்ட் மறுத்தார். அந்தச் சந்திப்புகள் பரஸ்பர சம்மதத்துடன் நடந்தவை என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும் அவர் கூறினார்.
புகார் அளிக்க அந்தப் பெண்கள் நீண்ட காலம் காத்திருந்ததை அவரது தரப்பு சுட்டிக்காட்டியது. பிராண்ட் மீதான குற்றச்சாட்டுகளைக் கொண்ட 2023 ஆவணப்படம், அவர்களின் கூற்றுகளை வடிவமைத்தது என்றும் வாதிட்டது.
பெண்களைக் கையாண்டு, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட்ட பாலியல் குற்றவாளி பிராண்ட் என அரசுத் தரப்பு விவரித்தது. தனது புகழைப் பயன்படுத்தி அவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார் என்று அரசு வழக்கறிஞர் டேவிட் ராபர்ட்ஸ் நீதிமன்றத்துக்கு வெளியே தெரிவித்தார்.
மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் துப்பறியும் கண்காணிப்பாளர் ஆண்டி ஃபர்ஃபி, புகார் அளிக்க முன்வந்த பெண்களின் அசாத்தியத் துணிவு, உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றைப் பாராட்டினார். பிராண்ட் தனது செல்வாக்கு, அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பெண்களைச் சுரண்டி, பாலியல் குற்றங்களைச் செய்தார் என்றும் அவர் கூறினார்.
ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, ஒளிபரப்புத் துறையில் பிரபலமான பிராண்ட், Get Him to the Greek, Arthur, Forgetting Sarah Marshall உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அமெரிக்கப் பாடகி கேட்டி பெரியை சிறிது காலம் மணந்திருந்தார். சமீப ஆண்டுகளில் உடல்நலம், சதிக் கோட்பாடுகள், மதம் தொடர்பான காணொளிகள் மூலம் இணையத்தில் பெரிய பின்தொடர்பாளர் வட்டத்தை உருவாக்கினார்.




