கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை தொடர்ந்து விமர்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்தார். இந்த ஆட்சியை யாரால் விமர்சிக்காமல் இருக்க முடியும் என்று கேட்ட அவர், தாம் மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் விமர்சிப்பதாகக் கூறினார்.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டுவிட்டதாகவும், அதைச் சரிசெய்ய அரசால் முடியவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் குறைந்த விலைக்குச் செய்யப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்குவதை நியாயப்படுத்தவே மின்வெட்டு ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறினார்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்திலும் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அவர் விமர்சித்தார். போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்போம் என்று கூறிவிட்டு, அதை மறைத்து வைத்திருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தவெகவினர் சிக்குவதாகவும் குற்றம் சாட்டினார். சிறையிலிருந்து 17 குற்றவாளிகள் தப்பியது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சம்பவம் என்றும், கோப்புகளைத் திறப்பேன் என்று கூறிவிட்டு சிறைகளைத் திறக்கின்றனர் என்றும் அவர் கூறினார். பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்த தமிழகம் அடிமட்டத்திற்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

“பவர் சென்டர் இருக்காது” என்று பதவியேற்பு விழாவில் விஜய் கூறியதை நினைவுகூர்ந்த ஸ்டாலின், ஆனால் அவரை டம்மியாக்கிவிட்டு கார்ப்பரேட் சென்டர்கள் ஆட்டிப்படைப்பதாகக் குற்றம் சாட்டினார். முதல்வர் பதவி என்பது காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலான அலுவலக வேலை அல்ல என்றும், கேள்விகளுக்குப் பதில் சொல்வது அவரது கடமை என்றும் கூறினார். எதைக் கேட்டாலும் திமுக மீது பழி போடுவதாகவும், அவதூறு பரப்பியே விஜய் ஆட்சியைப் பிடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக மக்கள் இரண்டாவது முறை ஏமாற மாட்டார்கள் என நம்புவதாக ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் இடைத்தேர்தல் வரவிருப்பதால், அமைச்சர் நேரு வீட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.