சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அபூர்வ ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் கடத்தப்பட்டன. இவ்வழக்கு தமிழக போலீசின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடந்தது. அவர் ஓய்வு பெற்று பொறுப்புகள் மாறியபோது, விசாரணை அறிக்கைகள், சாட்சிகளின் விவரங்கள், முக்கியமான ‘கேஸ் டைரி’, டிஜிட்டல் குறுந்தகடுகள் உள்ளிட்ட 41 ஆவணங்கள் போலீஸ் அலுவலகத்தில் இருந்து மாயமாகின. சிலை கடத்தல் கும்பலுக்கும் உயரதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பை மறைக்கவே இவை திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால், பொறுப்பு மாற்றத்தின்போது ஏற்பட்ட நிர்வாகக் குழப்பமே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், 41 ஆவணங்கள் மாயமானது குறித்த விசாரணை தொடர்வதாகவும், சில குறுந்தகடுகள் எதிர்பாராத தீ விபத்தில் அழிந்துவிட்டதாகவும், இதுவரை 21 பழமையான சிலைகள் மீட்கப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், கேஸ் டைரி மாயமானது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும், தொடர்புடைய உயரதிகாரிகள் இன்னும் உயர் பதவிகளில் இருப்பதால் உண்மைகள் மறைக்கப்படுவதாகவும், விசாரணை கண் துடைப்பே என்றும் வாதிடப்பட்டது. மாயமான ஆவணங்களைக் கண்டறிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மீட்கப்பட்ட 21 சிலைகள் யாரிடம் இருந்து மீட்கப்பட்டன, தற்போது எங்கு பாதுகாப்பாக உள்ளன என்பதை அரசு தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினர். ஆவணங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள், மீட்கப்பட்ட சிலைகளின் முழு விவரம், கைதானவர்களின் பட்டியல், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.