கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி அருண் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பதிவு செய்த கடுமையான கண்டனங்களை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. அவர் அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்தார்.
சென்னை கொளத்தூரில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதாவின் சகோதரரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்குச் சொந்தமான இடம் உள்ளது. அங்கு 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, அதில் 78 வீடுகளை ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அவற்றில் 48 வீடுகளைப் போலி ஆவணங்கள் மூலம் விற்று 42 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பூர்ணஜோதி புகார் அளித்தார். 1.38 கோடி ரூபாயை இழந்ததாக ரவி என்பவரும் புகார் அளித்தார். 2025 ஆகஸ்ட் 29ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தோஷ் சர்மாவும் அவரது மனைவி கல்பனா சர்மாவும் கைது செய்யப்பட்டனர். சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைக்க அருண் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது உயர் நீதிமன்றம் அருணுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. அவற்றை நீக்கக் கோரி அருண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர். மகாதேவன், அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு முன் நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணர்ந்து, சட்ட விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். குண்டர் சட்டம் போன்ற தடுப்புக் காவல் அதிகாரங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், ஒருவரது சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்திவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பது தீர்வாகாது என்றும் அவர்கள் கூறினர்.
இருப்பினும், அருணின் மன்னிப்பையும், எதிர்காலத்தில் கவனமாகச் செயல்படுவேன் என்ற உறுதிமொழியையும் ஏற்று, உயர் நீதிமன்றத்தின் கண்டனங்கள் மட்டும் நீக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. சந்தோஷ் சர்மாவுக்கு எதிரான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அது செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.



