திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோபுரத்தைச் சுத்தம் செய்ய, இறைவன் திருவீதியுலா வரும் நந்தி வாகனம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தீயணைப்பு வாகனம், ஏணி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளோடும் வழிபாட்டு மரபுகளோடும் தொடர்புடைய சிவபெருமானின் நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
கோபுரத்தைச் சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற அவர், அரசுத் துறைகளின் அலட்சியத்திற்கும் நிர்வாக வசதிக்கும் பக்தர்களின் இறை நம்பிக்கையைப் பலிகொடுப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவத்திற்காக கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முழுமையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இனி வரும் காலங்களில் கோவில் வாகனங்கள் ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாகப் பயன்படுத்தப்படாது என்றும், கோவில்களின் புனிதம் பாதுகாக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை உறுதியளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




