சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கூறி, தன்னிடம் பெரும் தொகை பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
முதலில் ரூ.15 கோடி, தீர்மானம் வரும்போது அரசுக்கு எதிராக வாக்களித்த பிறகு மேலும் ரூ.15 கோடி என்று பேசப்பட்டதாக முஸ்தபா குறிப்பிட்டார். அவர் கூறியபடி பார்த்தால் மொத்தம் ரூ.30 கோடி ஆகிறது. தன்னை அழைத்தவர் மதுரையைச் சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகி என்று கூறிய அவர், அந்த நபரின் பெயரைச் சொல்லவில்லை. அதிமுகவும் திமுகவும் ஒன்றிணைந்து குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதைக் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
காவல்துறையிடம் புகார் அளித்தீர்களா என்று கேட்டதற்கு, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று அவர் பதிலளித்தார். ரூ.100 கோடி கொடுத்தாலும் தவெக எம்.எல்.ஏ-க்கள் அணி மாற மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் குற்றச்சாட்டு
சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் இதேபோன்ற குற்றச்சாட்டை எழுப்பினார். திமுகவும் அதிமுகவும் பாஜகவுடன் கைகோத்து, தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை நிலைகுலையச் செய்ய முயல்வதாக அவர் கூறினார். பேரத் தொகை ரூ.70 கோடி வரை செல்வதாகவும் தெரிவித்தார்.
இதில் ஹவாலா பணம் புழங்குவதாகவும், பணம் பெங்களூரு வழியாகச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். வரவிருக்கும் இடைத்தேர்தல்களுடன் இந்த முயற்சிகளைத் தொடர்புபடுத்திய அவர், திமுகவும் அதிமுகவும் பொது வேட்பாளரை நிறுத்த யோசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுக மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என அதிமுக மறுத்துள்ளது. பொறுப்பில்லாமல் இவ்வாறு தொடர்ந்து பேசும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தங்கள் மீதான புகார்களிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றவே இந்த விவகாரத்தில் அதிமுகவை இழுப்பதாகக் கூறினார். முஸ்தபா சொல்வது கற்பனை என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக வழியில் மட்டுமே அதிமுக ஆட்சிக்கு வர விரும்பும் என்றும், அமைச்சர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




