பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களில் முந்தைய ஆண்டு வினாக்கள் இடம்பெறாத வகையில் அவற்றை வடிவமைக்க வேண்டும் என, உயர்கல்வித்துறைக்கு மாநில உயர்கல்வி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் 22 மாநில பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றில் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் பல்கலை உட்பட 13 பல்கலைகள் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்குகின்றன. இவற்றின் கீழ் உள்ள கல்லுாரிகளில் படிக்கும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு பல்கலைகளே செமஸ்டர் தேர்வுகளை நடத்துகின்றன.
மாநில பல்கலைகளின் செமஸ்டர் வினாத்தாள்களில் முந்தைய செமஸ்டர் வினாக்கள் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் பெரும்பாலான வினாக்கள் முந்தைய வினாத்தாள்களிலிருந்தே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற முடிகிறது; ஆனால் இது அவர்களின் சிந்தனைத் திறனை பாதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
உயர்கல்வித்துறை அதிகாரிகள், தனியார் பல்கலைகளின் வினாத்தாள்களுடன் ஒப்பிடும்போது மாநில பல்கலை வினாத்தாள்களின் தரம் குறைவாக உள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஐந்தாண்டு வினாத்தாள்களை ஒப்பிட்டால், பெரும்பாலான வினாக்கள் ஒவ்வொரு செமஸ்டரிலும் தொடர்ச்சியாக கேட்கப்பட்டுள்ளன. இதனால், சிந்தித்து எழுதுவதைவிட, முந்தைய வினாத்தாள்களை படித்தாலே தேர்ச்சி பெறலாம் என்ற மனப்பான்மை மாணவர்களிடம் உருவாகிறது என அவர்கள் கூறினர்.
எனவே, மனப்பாடக் கல்வியை தவிர்த்து, மாணவர்கள் சிந்தித்து பதிலளிக்கும் வகையில் செயல்முறை வடிவில் வினாக்கள் அமைய வேண்டும் என மாநில உயர்கல்வி மன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




