கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தை ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2026-2027 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன், நிதிக்கான நிர்வாக அனுமதியும் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி இன்றியமையாத கல்விக் கருவி என்று அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புக்குத் தயாராகவும் இது உதவும் என்றும் அது கூறியுள்ளது.

யாருக்குக் கிடைக்கும்

2026-2027 கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்கள் பயனடைவார்கள். கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டம் ஆகிய படிப்புகள் இதில் அடங்கும்.

கடந்த 2025-2026 கல்வியாண்டில் இத்திட்டத்தில் மடிக்கணினி பெறாத, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மூன்றாம், நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கும் இந்த முறை வழங்கப்படும்.

பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு இன்டெல் கோர் ஐ5 அல்லது அதற்கு இணையான உயர்தரச் செயலி கொண்ட மடிக்கணினிகள் தரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு, கொள்முதல்

திட்டம் தடையின்றி நடப்பதைக் கண்காணிக்க, முதல்வர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட உள்ளது. தரக்கட்டுப்பாட்டுடன் மடிக்கணினிகளை வாங்க, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு (ELCOT) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உலகளாவிய போட்டித் திறன்களைப் பெறவும், வேலைவாய்ப்புத் திறனை உயர்த்திக்கொள்ளவும் இந்தத் திட்டம் பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.