ஈரானுடனான போர் ராணுவ ரீதியாக “effectively over” என்ற நிலையை எட்டிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை சந்தித்த சில மணி நேரத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்தச் சந்திப்பு மூடிய அறைக்குள் நடந்தது. அதன் பின் அறிவிப்பின்றி வெள்ளை மாளிகை செய்தியாளர் அறைக்கு வந்த டிரம்ப், தற்போதைய நிலை அப்படியே தொடர்வதாகக் கூறினார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் “positive momentum” இருப்பதாகவும் சொன்ன அவர், விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

தயார் நிலையில் அமெரிக்கா

இப்போதைய சூழலில் ராணுவ நடவடிக்கை அவ்வளவு தேவையானதாகத் தெரியவில்லை என்றும், ஆனால் நிலைமை மாறினால் மீண்டும் களமிறங்க அமெரிக்கா “locked and loaded” எனப்படும் முழு தயார் நிலையில் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். “எதற்கும் நான் உத்தரவாதம் தரவில்லை” என்ற அவர், போர் முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சந்திப்புக்குப் பின் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்குவது தற்போது “quite unlikely” என்று அவர் தெரிவித்தார். கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள், ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்வதை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார். இந்த முற்றுகை ஈரானுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் இந்த நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும், அதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்காவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணையும் எரிபொருள் விலையும்

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது. போருக்கு முன் உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதம் சென்ற ஹார்முஸ் நீரிணை வழியான போக்குவரத்தை ஈரான் கிட்டத்தட்ட முடக்கிவிட்டது. இதனால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்து, அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் அன்றாடப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன.

கத்தார் இரு தரப்பிடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது. முற்றுகையை நிறுத்த வேண்டும் என்று தெஹ்ரான் கோருகிறது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்த சில நாட்களில் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன. பொருளாதாரமே முக்கிய கவலை என்று வாக்காளர்கள் கூறியிருந்தனர். தேர்தல் முடிவுகளை “ridiculous” என்று டிரம்ப் விமர்சித்தார்.

தாக்குதல்கள் மீண்டும் தொடங்காது என்று டிரம்ப் உறுதி அளிக்கவில்லை. கத்தார் மத்தியஸ்தத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றமும் ஈரானின் பதிலுமே அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும்.