தமிழக ஊரக வளர்ச்சித் துறை பயன்படுத்தும் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.22.10 கோடியை சைபர் குற்றவாளிகள் திருடியுள்ளனர். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. நிதி பரிமாற்றத்துக்கான இணையவழி போர்டலுக்குள் ஊடுருவி, கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் சிறுகச் சிறுக பணம் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பணம் எடுக்கப்பட்ட விதம்
பரிவர்த்தனைகளுக்காக ஊரக வளர்ச்சித் துறையும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் இணைந்து இந்த போர்டலை உருவாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். நிதி பரிவர்த்தனை செய்ய ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனி லாகின் ஐடி, கடவுச்சொல் வழங்கப்பட்டிருந்தன. மின்னஞ்சல் மூலம் இணைப்புகளை அனுப்பி போர்டலை முடக்கி இந்த மோசடி நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து மட்டும் ரூ.14 கோடி எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் ரூ.8.1 கோடி, மற்ற இரு ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து எடுக்கப்பட்டது. அவை எவை என்பதில் தகவல்கள் மாறுபடுகின்றன.
திருடப்பட்ட பணம் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கணக்குகளின் விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். அவற்றை முடக்கும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
வெளிநாட்டுத் தொடர்பு குறித்து ஆய்வு
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஐபி முகவரிகளை ஆய்வு செய்தபோது, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அணுகல் நடந்தது தெரியவந்துள்ளது. வெளிநாட்டு ஹேக்கர்கள் அல்லது சர்வதேச சைபர் குற்றக் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா என போலீசார் ஆராய்கின்றனர். புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த இதேபோன்ற சைபர் மோசடியுடன் தொடர்பு உள்ளதா என்பதும் பார்க்கப்படுகிறது.
பயனாளர் வங்கிக் கணக்குகளைக் கண்டறியவும், போர்டலுக்குள் எப்படி நுழைந்தனர் என்பதை அறிய டிஜிட்டல் பதிவுகளை ஆய்வு செய்யவும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு உள்ளிருந்து யாரேனும் உதவினார்களா, வங்கி ஊழியர்களுக்குத் தொடர்பு உண்டா, அதிகாரிகளின் லாகின் விவரங்கள் கசிந்தனவா என்பதும் விசாரிக்கப்படுகிறது.
பரிவர்த்தனைகளுக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காணவும், பணம் சென்ற வழியைக் கண்டறியவும், எடுக்கப்பட்ட தொகையை மீட்கவும் போலீசார் முயன்று வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை.




