மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் வியாழக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை திருடுபோயுள்ளன. திருடனைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
அதிகாலை சுமார் 3 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சுமார் 15 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்ட இந்தக் கடையை காலையில் ஊழியர்கள் திறக்க வந்தபோது, நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
உள்ளே நுழைந்தது எப்படி?
கட்டடத்தில் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. கட்டடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சாரம் வழியாக முகமூடி அணிந்த ஒருவர் மேல் தளத்துக்கு ஏறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர் லிஃப்ட் அமைக்கும் பகுதி வழியாகக் கடைக்குள் இறங்கி, அதே வழியில் வெளியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளே திருடப்பட்டதாகவும், லாக்கர்களில் இருந்த நகைகள் தொடப்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர். பெரும்பாலான நகைகள் கடையிலேயே உள்ளன. ஊழியர்கள் இருப்பைக் கணக்கிட்டு வருவதால், திருடுபோன நகைகளின் சரியான அளவும் மதிப்பும் இன்னும் உறுதியாகவில்லை.
கடை மற்றும் சுற்றுப்பகுதிகளின் சிசிடிவி பதிவுகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். முகத்தை மூடி, கையுறை அணிந்து, பைகளுடன் ஒருவர் நடமாடுவது அதில் பதிவாகியுள்ளது. அவருக்கு இந்தக் கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அவரது உயரம், உடல்வாகு, நடை ஆகியவற்றை ஆராயும் போலீசார், அவர் சென்ற வழியைக் கண்டறிய அருகிலுள்ள சாலைகள், கடைகள், பெட்ரோல் பங்குகளின் காட்சிகளையும் சேகரித்து வருகின்றனர். வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.
விசாரணை
மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். குற்றவாளியைக் கண்டறிந்து நகைகளை மீட்க, தெற்கு மண்டல துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களும் மோப்ப நாய்களும் கடைக்கு வரவழைக்கப்பட்டன.
கடை ஊழியர்கள், பொறியாளர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் தனித்தனியாக விசாரிக்கப்படுகின்றனர். கட்டடத்துடன் தொடர்புடைய யாருக்காவது இதில் பங்கு உண்டா என்பதையும் போலீசார் சரிபார்க்கின்றனர். விசாரணை தொடர்கிறது.




