தமிழ்நாட்டின் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர். மோகனை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கைதுக்கு முன்னதாக பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மோகனின் வீடு மற்றும் அலுவலகம், கோவை பெரியார் அறிவுலகம், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலுள்ள நூலகங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த நிறுவனங்களின் புத்தகங்கள் அச்சாகும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அச்சகத்திலும் சோதனை நடந்தது. புத்தகக் கொள்முதல் ரசீதுகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
எஃப்.ஐ.ஆர். கூறுவது என்ன?
மடிப்பாக்கத்தில் ஒரே முகவரியில் அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களை நடத்தும் மோகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்துள்ளது. பொது நூலக இயக்ககம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அதிகாரிகளும் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளுடன், பதிப்புரிமைச் சட்டமும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இல்லாத எழுத்தாளர்களின் பெயர்களில், ஏற்கெனவே வெளிவந்த நூல்களைப் பிரதியெடுத்தும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் உதவியுடனும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு விற்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர். குறிப்பிடுகிறது. இந்த இரு பதிப்பகங்களுக்கும் சுமார் ரூ.1.74 கோடி அரசுப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. வேறு பதிப்பகங்களும் இதேபோல் புத்தகங்கள் வழங்கினவா என்பதையும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது.
பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகக் கொள்முதல் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் முதலில் கேள்வி எழுப்பினார். அதன்பின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் கொள்முதல் குறித்தும் புகார்கள் எழுந்தன. நூலகத் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றக் கருத்துகள்
திங்கள்கிழமை இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு, இந்த முறைகேடு தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாகவும், அமைப்பின் மீதான நம்பிக்கை மீட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. கடந்த இருபது ஆண்டுகளில் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்பட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
போலி என அடையாளம் காணப்பட்ட பதிப்பகத்தினரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருக்கலாம் என்றும், “அவர்களைக் காவலில் விசாரிக்காவிட்டால், எந்த அரசு ஊழியருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது ஒருபோதும் தெரியாது” என்றும் அமர்வு கூறியது. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 20-ம் தேதி நடைபெறும்.




