காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய ‘Belonging: A Journey of Love’ சுயசரிதை நூலின் அதிகாரபூர்வ வெளியீட்டு விழா, புதுடெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட முதல்வர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் வந்திருந்தனர். இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கர்நாடகத்தின் டி.கே. சிவகுமார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் பங்கேற்றனர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, என்சிபி (எஸ்பி) தலைவர் சுப்ரியா சுலே, பாஜக தலைவரும் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் ஆகியோரும் வந்திருந்தனர். முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் அருகே முன்வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது.

நூலை எழுதிய காரணம்

ஹார்பர்காலின்ஸ் இந்தியா நிறுவன நிர்வாகி ஒருவருடன் உரையாடிய சோனியா காந்தி, தன் குடும்பத்தைப் பற்றி உண்மையில்லாத பல தகவல்கள் எழுதப்பட்டதால், தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள இந்த நூலை எழுத முடிவு செய்ததாகக் கூறினார். ராகுல், பிரியங்கா, தோழி மஞ்சுலிகா துபே ஆகியோரின் வற்புறுத்தலால் எழுதத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். தான் எப்போதும் நாட்குறிப்பு எழுதியதில்லை என்றும், நினைவில் இருந்தே பெரும்பாலானவற்றை எழுதியதாகவும் அவர் கூறினார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் பற்றிய பகுதிகளை எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது என்றார்.

இந்தியாவுக்கு வந்த பிறகு குடும்பத்தில் ஒன்றிணைய தான் எவ்வளவு முயன்றேன் என்பதைக் குறிக்கவே ‘Belonging’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததாக அவர் விளக்கினார். திருமணத்துக்குப் பின் புதிய வீட்டுச் சூழலுடன் பொருந்திக்கொள்வதில் பல இந்தியப் பெண்களும் சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

குடும்ப நினைவுகள்

மாமியார் இந்திரா காந்தியிடம் தொடக்கத்தில் அச்சம் இருந்ததாகவும், அவரை ‘மம்மி’ என அழைக்கத் தொடங்க நேரம் பிடித்ததாகவும் சோனியா கூறினார். ராஜீவ் காந்தியுடனான காதலை ‘மந்திரம் போன்றது’ என்று வர்ணித்த அவர், கேம்பிரிட்ஜ் நாட்கள், தினமும் எழுதிக்கொண்ட கடிதங்கள், திருமணத்தின் தொடக்க ஆண்டுகளில் இந்தியா கேட்டில் ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றது ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்.

கணவர் அரசியலில் ஈடுபடுவதை தான் எதிர்த்ததாகவும், இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்துவிடும் என அஞ்சியதாகவும் அவர் தெரிவித்தார். ராஜீவ் மறைவுக்குப் பிறகு தான் ‘குழந்தையாக’ மாறியதாகவும், ராகுலும் பிரியங்காவும் தனக்குப் ‘பெற்றோராக’ இருந்ததாகவும் கூறினார்.

நூலுக்கு வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு தன்னை நெகிழ வைத்ததாகவும், இணையத்தில் சில எதிர்வினைகள் கடுமையாகவும் சில நேர்மையானவையாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.