தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள ஆண் ஊழியர்களுக்கு முதல்முறையாக தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறப்பை ஒட்டி 15 நாட்கள் விடுப்பு கிடைக்கும்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெண் அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், ஆண் ஊழியர்களுக்கும் இதேபோன்ற விடுப்பை வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விடுப்பின் நோக்கம்
குழந்தை பிறக்கும் காலம் தாய்க்கும் சேய்க்கும் மிக முக்கியமானது என்றும், அப்போது தாய்க்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆதரவு தேவை என்றும், குழந்தையைப் பராமரிப்பதில் தந்தையின் பங்கும் அவசியம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த விடுப்பு குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதி செய்யவும் உதவும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மனைவியின் பிரசவ காலத்தில் அவருடன் இருப்பதற்காக, திருமணமான ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எப்போது எடுக்கலாம்
குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ, குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளோ இந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம்.
முன்பு மனைவிக்குப் பிரசவம் ஆன பிறகு ஆண் ஊழியர்கள் விடுப்பு எடுக்க முடிந்தாலும், அது மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பிற விடுப்புக் கணக்கில் சரிசெய்யப்பட்டு வந்ததாக மூத்த அதிகாரிகள் விளக்கினர். புதிய உத்தரவின்படி இந்த 15 நாட்கள் தனி உரிமையாக வழங்கப்படும் என்றும், ஊழியரின் இருப்பில் உள்ள விடுப்பிலிருந்து கழிக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரவேற்பு
இந்த அறிவிப்புக்குத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.




