
சிக்கிமில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதை இடிந்து 10 பேர் பலி
காங்டோக்: சிக்கிமில் நீர்மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கம் இடிந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நம்சி மாவட்டம் ஜோலுங்கேயில் உள்ள சமர்துங்கில் இந்த சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்தன. சம்பவ நேரத்தில் திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 25 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இடிபாடு ஏற்பட்டதும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பல கட்டங்களாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களில் 7 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மிகவும் உருக்குலைந்த நிலையில் இருந்த 3 உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.


































