
எம்எல்ஏ பேரம் வழக்கு: செந்தில்பாலாஜி பின்னணி குறித்து ஈ.டி. விசாரணை
சென்னையில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க த.வெ.க. எம்எல்ஏ இளையராஜாவுக்கு ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இளையராஜா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் சம்மன் மற்றும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். விசாரணை அதிகாரி முன் காலை, மாலை என இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.


































