
2036 ஒலிம்பிக் நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் ஆர்வம்: ஐ.ஒ.சி.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ.ஒ.சி.) அறிவித்துள்ளது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி, கடைசியாக 2024-ல் பிரான்சின் பாரிசில் நடந்தது. அடுத்ததாக 2028-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2032-ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. 2036 போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2036-ல் ஆமதாபாத்தில் ஒலிம்பிக் நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.) ஐ.ஒ.சி.-க்கு முறைப்படி விண்ணப்பம் அளித்துள்ளது. ஐ.ஒ.சி. வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, ஜெர்மனி, கத்தார், தென் ஆப்ரிக்கா, துருக்கி, தென் கொரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடத்திற்கான விரிவான திட்டம், விளையாட்டு நட்சத்திரங்களின் அனுபவம், நிதி திரட்டும் வலிமை, அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவு, போட்டி நடத்தும் திறன், நீண்டகால பலன்கள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை ஆர்வமுள்ள நாடுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


































