
போதை கடத்தலை கட்டுப்படுத்த ‘ஆப்பரேஷன் துாபான்’ ஒருங்கிணைப்பு: தென் மாநிலங்கள் இணக்கம்
கேரளாவில் செயல்படுத்தப்பட்ட ‘ஆப்பரேஷன் துாபான்: தி நார்கோ ஹன்ட்’ நடவடிக்கையின் பலன்களைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தென் மாநிலங்கள் இணைந்து செயல்படும் வகையில் நிரந்தர மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க ஐந்து மாநிலங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் ஒப்பந்தமாக முடிவு செய்துள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாசாரம் அதிகரிப்பதாகக் கூறப்படும் சூழலில், இளைஞர்களை போதை என்னும் “புயல்” பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கவே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக கேரளா அரசு விளக்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் மாநில போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் உயரதிகாரிகள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


































