
தேர்தல் நடைமுறைகளில் பெரும் முறைகேடு: தலைமை நீதிபதிக்கு ‘இண்டி’ கூட்டணி கடிதம்
புதுடில்லி: நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் “மிகப்பெரிய அளவில் முறைகேடு” நடக்கிறது என்றும், நீதித்துறை தலையிடவில்லை என்றால் அது குடியரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறி, எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சியான பா.ஜ.க.க்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளன. பா.ஜ.க. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் போது மவுனம் காக்கும் தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது என்றும் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் “சிறப்பு தீவிர திருத்தப் பணி” (SIR) தேவையற்றது; பேரழிவுக்கு சமம் என விமர்சித்துள்ளன. ஆவண சரிபார்ப்பு என்ற பெயரில் வாக்காளர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கி, சுமார் 25 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.


































