
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது அநாகரிகம் செய்தால் கைது: உயர்நீதிமன்றம்
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சுந்தரவடிவேல் தாக்கல் செய்த மனுவில், 2025-ல் நடந்த நிகழ்வின்போது சிலர் திட்டமிட்டு பக்தர்கள் கூட்டத்திற்குள் காலணிகளை வீசியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறினார். நேர்த்திக்கடன் செலுத்த கடவுள் வேடமிட்டு வருபவர்களும் அவமரியாதைக்கு உள்ளாகும் நிலை உருவாகிறது என்றும், வெளிமாவட்டம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களின் மனதில் தவறான எண்ணம் உருவாகலாம் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது. விசாரணையில் அரசு தரப்பு, திருவிழா பாதுகாப்புப் பணிக்காக 3,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.


































