
தமிழகத்தில் தொகுதி வாரி ஓட்டுப்பதிவு விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை
சென்னை: தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து மூன்று நாட்கள் கடந்தும், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் எத்தனை வாக்குகள் பதிவானது என்ற தொகுதி வாரியான விபரங்களை தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை. தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.87 கோடி பேர் வாக்களித்ததாகவும், மொத்த ஓட்டுப்பதிவு சதவீதம் 85.10 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 86 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. பொதுவாக ஓட்டுப்பதிவு நாளின் இரவில் தோராயமான சதவீதம் அறிவிக்கப்பட்டு, மறுநாள் துல்லியமான இறுதி விபரம் வெளியிடப்படும். மேலும் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எனப் பிரித்து தொகுதி வாரியான பங்கேற்பு விபரங்களும் வெளியிடப்படும்.


































