
கள்ள உறவு தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர் கைது
திருமணத்துக்கு புறம்பான உறவு தொடர்பான தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறப்படும் 32 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பர்தீப் (32). டெல்லி பாலம் அருகே ஜெ.ஜெ. காலனியில் வசித்து வந்த அவர், சிறிய பிரியாணி கடை நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவரது மனைவி சோனியா (30). 2017ல் திருமணம் ஆன இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பர்தீப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு நடந்ததாகவும் போலீசார் கூறினர். செப். 27 மாலை 5 மணியளவில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பர்தீப் இறைச்சி வெட்டும் கத்தியால் சோனியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. மார்பு மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்; பின்னர் பர்தீப் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல்.


































