
பெண்கள் பாதுகாப்புக்கு அதிமுக ஆட்சி தேவை: சேலத்தில் இபிஎஸ் பிரசாரம்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்தார். சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட குப்பனூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் இதை கூறினார். இந்த தேர்தல் தமிழக மக்களுக்கும், தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் “ஒரு குடும்பத்திற்கும்” இடையிலான போட்டி என அவர் வர்ணித்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தற்போதைய ஆட்சியில் காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை என கூறிய இபிஎஸ், கடந்த ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


































