
ஓஹியோவில் ஹிந்து கோவில் மீது செங்கற்கள் வீச்சு; மர்ம நபர்கள் தப்பினர்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள ஹிந்து கோவிலில் மர்ம நபர்கள் செங்கற்களை வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் கோவிலின் சில பகுதிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. க்ளீவ்லேண்ட் பெருநகரப் பகுதியில் உள்ள ரிச்மண்ட் ஹைட்ஸில் அமைந்துள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதல் நடந்த நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்களும் குருக்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிடைத்துள்ள வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து மர்ம நபர்களை அடையாளம் காண முயன்று வருகின்றனர். கோவில் மீதான தாக்குதலை ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சம்பவத்தின் போது பதிவான வீடியோ காட்சிகளை தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த அமைப்பு, காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், எப்.பி.ஐ மற்றும் குடியுரிமை/சிவில் உரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.


































