
வரி ஏய்ப்பு, தேர்தல் பணப் பதுக்கல் புகார்: ஜவுளி கடைகளில் ஐ.டி. சோதனை
வரி ஏய்ப்பு மற்றும் தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இயங்கும் பிரபல ஜவுளி கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலம், ராமநாதபுரம், உதகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகள் நடைபெற்றன. சேலம் நான்கு சாலையில் உள்ள ஒரு பிரபல கடையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். ராமநாதபுரம் அக்ரஹாரம் சாலையில் உள்ள கடையை காலை 9 மணியளவில் பூட்டி சோதனை நடத்தப்பட்டதாகவும், அதே கடையின் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள கடையில் காலை 8 மணியளவில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை தொடங்கியதால், அந்த நாளில் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


































