
தமிழகம் முழுவதும் வேட்புமனு பரிசீலனை; ஸ்டாலின், பழனிசாமி, விஜய் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. மார்ச் 30 முதல் ஏப். 6 வரை நடந்த மனுத் தாக்கல் காலத்தில் மொத்தம் 7,599 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. வரும் ஏப். 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு பரிசீலனை தொடங்கி, மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டன; வேட்பாளர்களுடன் கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் மனுவும் அனுமதி பெற்றது.

































