
நக்சலிசம் தளர்ந்தாலும் கண்காணிப்பை தொடர வேண்டியது அவசியம்
நக்சல் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபட்டுவிட்டதாகவும், 2026 மார்ச் 31க்குள் நக்சலிசத்தை ஒழிப்பது என்ற மத்திய அரசின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் தெரிவித்தார். இதன் மூலம் பல ஆண்டுகளாக நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறையும் என்ற நம்பிக்கை உருவாகிறது. நக்சல் இயக்கம் 1967ல் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் தொடங்கிய ஆயுதப் போராட்டத்திலிருந்து உருவானது. பின்னர் சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அதன் ஆதிக்கம் பரவியது.


































