
மகளிர் இலவச பேருந்துப் பயணம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் தொடக்கம்
அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் புதன்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை–காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்தில் அவர் இதை துவக்கினார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து செயல்படுத்தினார். பின்னர் பேருந்தில் ஏறிய முதல்வர், பெண் பயணிகளுடன் உரையாடி, அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விரிவாக்கத்தின் கீழ், மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள், மேலும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 12,692 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.


































