
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தை உடனே ஒப்படைக்க அமிர்தாஞ்சனுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை, அமிர்தாஞ்சன் நிறுவனம் உடனடியாக காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனி நீதிபதி வழங்கிய உத்தரவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு உறுதி செய்தது. லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரவுண்ட் 910 சதுர அடி நிலம், 1901-ம் ஆண்டு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாதம் ரூ.1,400 என வாடகை நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அந்த குத்தகை உரிமைகள் ராமாயி அம்மாளுக்கு மாற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அமிர்தாஞ்சன் நிறுவனம் உரிமைகளைப் பெற்றதாக கூறப்பட்டது. குத்தகை காலம் 2000 ஆகஸ்ட் 27-ல் முடிவடைந்த நிலையில், இடத்தை காலி செய்யுமாறு 2001 மற்றும் 2004-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் நிறுவனம் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து, அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் 2005-ல் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, நகரின் மையப்பகுதி என்பதைக் கருத்தில் கொண்டு மாத வாடகையை ரூ.3.30 லட்சமாக நிர்ணயித்தது.

































