
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின்
2024-25ம் ஆண்டில் 7,997 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளித் துணிகளை ஏற்றுமதி செய்து, இந்தியாவில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய அரசின் ஏற்றுமதி–இறக்குமதி தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை தெரிவித்துள்ளது. ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்காக தேசிய அளவில் ஏற்றுமதி–இறக்குமதி விவரங்களை பதிவு செய்யும் ‘நிர்யாத்’ தளம் வெளியிட்ட அறிக்கையில், ஜவுளி ஏற்றுமதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைத் தாண்டி தமிழகம் முன்னிலை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதி 29% வளர்ச்சி கண்டுள்ளதாக கூறினார். 2020-21ல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, அடுத்த நான்கு ஆண்டுகளில் 7,997 மில்லியன் டாலராக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


































