
குருவாயூர் கேசவன் சிலை தந்தங்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் மறுசீரமைப்பு
பாலக்காடு: குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘குருவாயூர் கேசவன்’ யானை சிலையின் தந்தங்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. 1970ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு கோவில் வளாகத்தில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கோவிலின் ஆன்மிக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற ‘குருவாயூர் கேசவன்’ நினைவாக கிழக்கு நுழைவாயிலில் உருவச்சிலை நிறுவப்பட்டது. ‘கஜராஜன்’ என அழைக்கப்பட்ட இந்த யானை 10 அடி 9 அங்குல உயரமுடையது. 54 ஆண்டுகள் கோவில் சேவையில் ஈடுபட்ட அது, 1976ல் ஏகாதசி தினத்தில் 64 வயதில் உயிரிழந்தது. அதன் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், அது உயிருடன் இருந்த காலத்திலேயே சிலை நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


































