
போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது: பிரதமர் மோடி
போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தின் சில்சார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை கூறினார். இதற்கு முன் ரூ.23,550 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாமின் இளைஞர்கள் வன்முறை மற்றும் பயங்கரவாத பாதைக்கு தள்ளப்பட்டதாகவும், வட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். பொறுப்பான அரசியல் கட்சியாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அதில் தோல்வியடைந்ததாகவும் கூறினார். வளர்ச்சி பாதையில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜகவின் தாரக மந்திரம் என மோடி தெரிவித்தார். எல்லைப் பகுதிகளை காங்கிரஸ் “நாட்டின் கடைசி கிராமங்கள்” எனக் கருதியதாகவும், தங்கள் அரசு அவற்றை “நாட்டின் முதல் கிராமங்கள்” எனக் கருதுவதாகவும் அவர் கூறினார்.


































