
தமிழக மக்கள் உதயநிதியை முதல்வராக ஏற்க மாட்டார்கள்: பியூஷ் கோயல்
திருச்சி: தமிழக பா.ஜ. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தமிழர்களின் பெருமையும் தமிழ் கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டிய தேர்தல் என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஊழல் நடைமுறைகளிலிருந்து மக்களை காப்பதற்கானது என்றும் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலில் தி.மு.க. அரசு அகற்றப்படும் என கூறி, தமிழக மக்கள் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக “ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று வலியுறுத்தினார். டாஸ்மாக் தொடர்பான ஊழல் மூலம் அரசு கருவூலத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கும் தி.மு.க. நிர்வாகிகளுக்கும் ரூ.50,000 கோடி சென்றதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அரசின் பல்வேறு ஒப்பந்தங்களிலும் ஊழல் மலிந்துள்ளதாக கூறினார்.


































