
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பு: மத்திய அரசு, இ.க.க்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ்
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் பதவியில் இருக்கும் போது அதிகாரப் பணிகளில் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக குற்றவியல் வழக்குகள் தொடர முடியாத வகையில், 2023ல் கொண்டு வரப்பட்ட சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தாக்கல் செய்து, அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். மனுதாரர் தரப்பில், நீதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு நிகராக தேர்தல் கமிஷனர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானது என வாதிடப்பட்டது. மேலும், இந்த பிரிவு தேர்தல் கமிஷன் முடிவுகளை கேள்விக்குள்ளாக்க முடியாத நிலையை உருவாக்கும் எனக் கூறி, இடைக்கால தடை கோரப்பட்டது.


































