
இடைக்காட்டூரில் பட்டியலினத்தவர் மீது தாக்குதல்: 5 பேர் கைது, 4 பேர் தலைமறைவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்மீது நடந்ததாக கூறப்படும் தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 3 மதியம் 3 மணியளவில் செட்டிகுளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் (41) மற்றும் வி.புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஷ் (42) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த இடைக்காட்டூரைச் சேர்ந்த ராஜூ (42) சண்டை வேண்டாம் என கூறி இருவரையும் விலக்கினார். அதே நாள் இரவு 8 மணியளவில் மகேஷ் நண்பர்களுடன் 3 இருசக்கர வாகனங்களில் வந்து பாண்டியராஜை தேடியதாகவும், அவர் அங்கு இல்லாததால் ராஜூவை எதிர்கொண்டு தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தடுக்க வந்த ராஜூவின் சகோதரர் ராஜேந்திரன் (45) மற்றும் உறவினர் தினேஷ் (29) ஆகியோரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


































