
எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு திட்டம்; 21 கோடி டன் நிலக்கரி கையிருப்பு சாதனை
புதுடில்லி: நாட்டின் சில துறைகளில் உருவாகியுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு விரிவான உத்தியை வகுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நிலக்கரி அமைச்சகத்திற்கு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கை, மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வர, ஈரானும் பதிலடி கொடுப்பதால் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாக கூறப்படுவதால், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20% பாதிக்கப்படும் சூழல் உருவாகி, இந்தியாவையும் சேர்த்து பல நாடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


































