
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி திமுக ஆட்சி: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திமுக அரசின் சாதனைகள் பிற மாநிலங்கள் தமிழகத்தை முன்மாதிரியாகப் பார்க்கும் அளவுக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அறிக்கையில், 2021 மார்ச் 7 அன்று திருச்சி அருகே சிறுகனூரில் கட்சியினரை சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், வரும் மார்ச் 9 அன்று அதே இடத்தில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையவுள்ளதாக கூறினார். தமிழகத்தில் 11.19% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பதிவானதாகவும், அது மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததாக கூறிய ஸ்டாலின், அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை வேகப்படுத்த மேலும் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றார்.


































