
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீர்மானம்: மார்ச் 9ல் லோக்சபாவில் விவாதம்
புதுடில்லி: லோக்சபா வரலாற்றில் அரிதான நிகழ்வாக, சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் குறித்து மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீர்மானம் அவரைச் சார்ந்ததாக இருப்பதால், அன்று அவர் சபைக்கு தலைமை வகிக்காமல், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வரிசையில் அமர்ந்து விவாதத்தை கவனிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 9ல் தொடங்குகிறது. இதில் பல்வேறு பிரச்னைகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அரசு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது. முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை என்றும், எட்டு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதன் தொடர்ச்சியாக சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


































