
பொன்முடி செம்மண் குவாரி வழக்கு: ஏப்.2ல் விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
முன்னாள் திமுக அமைச்சர் கே.பொன்முடி தொடர்பான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2006–2011 காலகட்டத்தில் பொன்முடி அமைச்சராக இருந்த போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் விதிமீறி மண் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட எட்டு பேரை குற்றம்சாட்டினர். வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

































