
சபரிமலை பணியாளர்களின் வங்கி கணக்குகள் வழி கோடிக்கணக்கில் லஞ்ச பரிமாற்றம்: அறிக்கை
2025–26 மண்டல–மகரவிளக்கு சீசனில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள், லஞ்சம் மற்றும் முறைகேடுகள் மூலம் பெற்றதாக கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாயை தங்களின் வங்கி கணக்குகள் வழியாக பரிமாற்றம் செய்ததாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் தனலட்சுமி வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகள் உள்ளதாகவும், கோவில் பணியாளர்கள் இவ்வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. கோவிலில் தங்கம் கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு, சபரிமலையில் நடந்ததாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஊழியர்கள், பூசாரிகள் மற்றும் உதவி பூசாரிகள் உள்ளிட்டோர் கண்காணிப்பில் இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்காமல் இருக்க பணத்தை கையில் வைத்திருக்காமல், அவ்வப்போது பலரது கணக்குகளுக்கு வங்கி வழியாக அனுப்பியதாக அறிக்கை கூறுகிறது.

































