
மார்ச் 11ல் திருச்சியில் தே.ஜ.க. பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.க.) கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11ல் திருச்சிக்கு வருவார் என தமிழக பா.ஜ.க. உறுதி செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தே.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 11ல் திருச்சியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1ம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்ததுடன், பிரசார பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் பங்கேற்றார்.


































